நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்
தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிலும் விடியல் பிறக்கும் என திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
திமுகவின் இரண்டாவது மாநில இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி, 100 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்தார். திமுக இளைஞரணியின், மாநில உரிமை மீட்பு மாநாட்டில் 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பேசினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரை வெளியிட்டார்.
விழா பேரூரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி மீது தனக்கு எப்போதும் தனிப்பாசமும், உரிமையும் உண்டு என்றார். மாநிலத்திற்கான நிதி அதிகாரத்தை ஒன்றிய பாஜக அரசு முற்றிலுமாக பறித்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒன்றிய அரசுக்கு பணம் தரும் ஏடிம்ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள் என்று சாடினார். தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட வரவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பாஜக உடன் அனைத்தையும் செய்துவிட்டு தற்போது கூட்டணி முறிந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுவதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார். தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியாவிலும் விடியல் பிறக்கும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முன்னதாக உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவிச் சாயம் பூசும் பாஜகவை அகற்றுவதே முதல் பணி என்று சூளுரைத்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரிடம் மேடையிலேயே கேட்டுக்கொண்டார். திமுக இளைஞரணி மாநாட்டில் உரையாற்றிய கனிமொழி, மத்திய அரசை கேள்வி கேட்டால் , சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நம்மை தேடிவரும் என்று கூறினார். மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் சூடான மட்டன் பிரியாணியுடன், சிக்கன் 65 என விருந்து அளிக்கப்பட்டது.