யூடியூப் பவர்!! தினக்கூலியாக இருந்தவர் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார்.. யார் இந்த ஐசக் முண்டா..?!

ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் தினக்கூலி தொழிலாளியான ஐசக் முண்டா திடீரென்று வேலையை இழந்தபோது சற்று தடுமாறிப் போனார். பெரிய தொழில் திறன் எதுவும் இல்லாத நிலையில் குடும்பத்தை நடத்துவது எப்படி என்று சோகத்தில் ஆழ்ந்தார்.
இருப்பினும் ஏதோவொரு மூடில் பாரம்பரிய ஒடியா உணவு வகைகளை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பில் பகிரத் தொடங்கினார். சீக்கிரமே 20,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்றார்.
இதன்மூலம் அவருக்கு யூடியூப்பில் இருந்து மெல்ல மெல்ல வருமானம் வரத் தொடங்கியது. தொடர்ந்து உற்சாகமாக வீடியோக்களை தயாரித்து பதிவேற்றி வந்தார். அவரது வெற்றிக் கதையைப் பற்றி பார்க்கலாம்.
கொடிய கொரோனா நோய்த்தொற்று உலகைத் தாக்கியபோது, ஐசக் தனது வேலையை இழந்தார். அப்போது நான் தினக்கூலியாக வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது, வேலை பறிபோனதால் அந்தத் தொகையையும் இழந்தேன். குடும்பத்துக்கு உணவளிக்க முடியாத நிலையில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டி உதவியற்று நின்றிருந்தேன்.
அப்போதுதான் யூடியூப்பில் வீடியோ தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டேன். அதை முயற்சிக்க முடிவு செய்தேன். பல்வேறு பாரம்பரிய ஒடியா உணவு வகைகளை சாப்பிடும் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினேன்.
எனது முதல் யூடியூப் வீடியோவை மார்ச் 2020 இல் பதிவேற்றினேன். பருப்பு, கீரைகள், தக்காளி மற்றும் மிளகாயுடன் சாதம் சாப்பிடுவதை அந்த வீடியோவில் காணலாம். ஆரம்பத்தில், எனது வீடியோக்களை யாரும் பார்க்கவில்லை.
ஆனால் மெதுவாக, மக்கள் எனது சுயவிவரத்தைப் பார்க்கத் தொடங்கினர். ஒடிசாவில் பிரபலமான புளித்த அரிசி உணவான பாசி பகலாவை நான் ருசித்த வீடியோ ஒன்று வைரலாகி எனக்கு 20,000 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்தது.
அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா போன்ற நாடுகளில் எனது வீடியோக்களைப் பார்ப்பது ஒரு கனவாக இருந்தது. மன்கி பாத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டேன். இன்று, எனது வீடியோக்கள் சிறப்பாக செயல்படும் போது நான் சுமார் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறேன்.
எனது வீடியோக்களை எடிட் செய்வதற்காக லேப்டாப் மற்றும் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கினேன். இப்போது நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை எனது குடும்பத்துக்கு நான் வழங்குகிறேன் என்று நெகிழ்வோடு ஐசக் முண்டா கூறினார்.
ஐசக் முண்டாவுக்கு இப்போது யூடியூபில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது வீடியோக்களை மக்கள் ஆர்வமாக பார்த்து ரசிக்கின்றனர். ஃபாலோயர்கள் அதிகரித்துவரும் நிலையில் அவரது வருவாயும் பெருகி வருகிறது.