யூசுப் பதான், மஹுவா மொய்த்ரா.. அதிரடியாக மம்தா இறக்கிய நட்சத்திர வேட்பாளர்கள்

மேற்கு வங்கத்தில், 35 ஆண்டுகளாக கோலோச்சி வந்த கம்யூனிஸ்ட்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மம்தா பானர்ஜி, 2011-ஆம் ஆண்டு முதலமைச்சரானார். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ள மம்தா, அகில இந்திய அளவில் உருவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்தியா கூட்டணியில் இணைந்தார்.

அதேநேரம், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக கடந்த ஜனவரி மாதம் திடீரென அறிவித்தார் மம்தா. எனினும் அவரை இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்தி வந்தது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 8 முதல் 10 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்டு வந்த நிலையில், மூன்றைத் தாண்ட மறுத்தார் மம்தா.

இந்த நிலையில், திடீரென கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா. குறிப்பாக, அழகிப் போட்டிகளில் பெண்கள் ஒய்யார நடைப் பழகுவது போல வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றிபெற்ற பெர்ஹாம்போர் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் களம் இறக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா, கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அசன்சோல் தொகுதியில் நடிகர் சத்ருகன் சின்காவும், பர்த்வான் துர்காபூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்தவே காங்கிரஸ் விரும்புகிறது என்றார். அதேநேரத்தில், எந்த அரசியல் கட்சியும், நம்ப முடியாத தலைவராக மம்தா இருப்பதாக அதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இதனால்தான் இந்த முறை காங்கிரஸுக்கு 2 இடங்களுக்கு மேல் தர மம்தா மறுக்கிறார். மேலும் கூட்டணியில் இடதுசாரிகளை சேர்க்கவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மம்தாவின் இந்த நிலைப்பாட்டால் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி Take off ஆகாது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *