Zee – சோனி இணைப்பு திட்டம் முறிவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
இ ந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் செவ்வாயன்று ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி இந்தியா இடையேயான பல பில்லியன் டாலர் இணைப்பு ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன்னர் நிறுத்தப்பட்டது என்ற செய்தி இந்த மாத துவக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிர்வாகம் இந்தத் தகவல் அடிப்படையற்றது மற்றும் தவறான விளக்கத்தை வழங்கியது.
ஆனால் சோனி குரூப் கார்ப் வெள்ளிக்கிழமை நிர்வாகக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இன்று Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உடனான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியச் செயல்பாடுகளை இணைக்கும் திட்டத்தை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 வருட முயற்சிகள் முடிவுக்கு வருகின்றன.
ஜப்பான் நாட்டின் சோனி நிர்வாகம் இணைப்பு முறிவு குறித்து அதிகாரப்பூர்வ கடிதத்தைத் திங்கட்கிழமை காலையில் Zee Entertainment நிர்வாகத்திற்குக் கொடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பங்குச்சந்தையில் இன்று மாலைக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி – ஜீ என்டர்டெயின்மென்ட் இணைப்பில், சோனி தரப்பிலான கண்டிஷன்களைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு புனித் கோயங்கா தலைமை தாங்குவது சோனி நிர்வாகத்திற்கு விருப்பமில்லை எனப் பேச்சு நிலவியது குறிப்பிடத்தக்கது.
சோனி – Zee Entertainment இணைந்திருந்தால் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா கூட்டணி உருவாகும், இதன் மூலம் இந்திய மீடியா நிறுவனங்களை மட்டும் அல்லாமல் அமெரிக்க மீடியா நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றையும் ஓரம்கட்ட முடியும். சோனி – Zee Entertainment இணைப்பிற்கு ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் புனித் கோயங்கா தலைமையிலான நிர்வாகக் குழு 30 நாள் கூடுதல் அவகாசம் கேட்டது.
இதைக் கொடுக்க முடியாத காரணத்தால் தற்போது ஒப்பந்தம் முறிவு கடிதத்தை ஜப்பான் சோனி நிறுவனம் ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளது. இதனால் சோனி – டிஸ்னி ஹாட்ஸ்டார் இணைய வாய்ப்புகள் உருவாகியுள்ளது, இது மட்டும் நடந்துவிட்டால் ஒட்டுமொத்த இந்திய மீடியா துறைக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும். ஆனால் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகியவை ஏற்கனவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் உள்ளது, இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.